
அந்தக் காட்டிலே என்ன இருக்கிறது?
ஒரு ஊரில் மீனா என்ற சுட்டிப் பெண் இருந்தாள். அவள் நல்ல புத்திசாலிப் பெண்.
அவள் ஊருக்கு மேற்கே ஒரு அடர்ந்த காடு இருந்தது. மீனாவுக்கு அந்தக் காட்டினுள்ளே அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் அந்தக் காட்டிற்குள் போக வேண்டாமென அவளது பெற்றோர் எச்சரித்திருந்தனர்.
ஒருநாள் மீனாவின் பெற்றோர் அடுத்த ஊரில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். அவர்கள் இல்லாத சமயத்தில் அந்தக் காட்டிற்குள் புகுந்து பார்த்துவிடுவதென மீனா முடிவெடுத்தாள். யாரும் பார்க்காதபோது காட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் காலடியில் மிதிபட்டு சருகுகள் ஓசை எழுப்பின. நடுக்காட்டிற்குள் நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று அங்கே ஒரு பெரிய பூதம் அவள் முன்னே வந்து நின்றது. அதைக் கண்டு திடுக்கிட்டாள் மீனா. அவளைவிடப் பத்து மடங்கு உயரமாக இருந்தது அந்த பூதம்.
“ம்ம்ம், என் மதிய உணவு நீதான்” என்று அவளைப் பார்த்துக் கூறி பயங்கரமாகச் சிரித்தது.
“அதோ அங்கே இன்னொரு பூதம்” என்று கூறி பயந்தவளாய் பூதத்தின் பின்னே பார்த்தாள். அவள் காட்டிய திசையில் அந்த பூதம் திரும்பிப் பார்க்கையில் மீனா தப்பி ஓடினாள். நில்லாமல் ஓடி காட்டிற்கு வெளியே வந்தாள். நேரே வீட்டிற்குள் போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.
பூதம் பெரிதாகவும் பருமனாகவும் இருந்ததால் அவளுக்கு ஈடுகொடுத்துத் துரத்திப் பிடிக்க இயலவில்லை.
மீனாவின் சமயோசித புத்தி அவளைக் காப்பாற்றியது. அதன்பின் அந்தக் காட்டிற்குள் நுழைவதேயில்லை என்று சத்தியம் பண்ணிக்கொண்டாள். இப்படியாக மீனா அன்று தப்பித்தாள்.
---
"365 Moral Stories" என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.